உறுத்தல்
தமிழ் என் மொழி ; தமிழே என் வழி என்று தவறியும் சொல்லி விட்டால் போதும். சொன்னவன் தமிழ் வெறியன் என்று முத்திரை குத்தப்படுவான். அதிலும் தமிழில் சமற்கிருதம் கலக்காதே என்று குரல் எழுப்பி விட்டாலோ அவனுக்கு நாத்திகன் எனும் பட்டம். ஏன் இந்த நிலைமை? தமிழுக்கும் கடவுளுக்கும் பகையா? இல்லை தமிழைக் கடவுள் மறுக்கிறாரா? உண்மை நிலை என்ன..? யார் தமிழன் என்பதைக் கூட உணர மறுக்கும் இந்தச் சமுதாயத்திற்கு இவற்றை எடுத்துரைப்பதில் இருக்கும் நியதி எனக்குப் புலப்படவில்லை. ஊட்டி ஊட்டி வளர்த்து விடுவதால் என்ன பயன் இருக்கப் போகிறது..? சமற்கிருதம் தான் தாய்மொழிக்குத் தாய்மொழி; அது கடவுள் பேசும் மொழி; அதனால் செய்யப்படும் பூசைகள்தான் சிறப்பாகும் என்பதை இன்னும் எத்தனைக்காலம்தான் நம்பி வாழப் போகிறோம்? இன்னமொழிதான் கடவுளுக்குப் புரியும் என்றால் பிறவி ஊமைகளுக்குக் கடவுள் அருள் தர மாட்டாரா? அவர்கள் இறந்து போய் விடலாமா? மிருகங்களும் சமற்கிருதம் பேச வேண்டுமா? இப்படி எல்லாம் கேட்பதால் நான் கெட்டவனா? சமற்கிருதம் நல்ல மொழியா இல்லையா என்பதில்லை என் வாதம். கடவுளுக்கு ஒரு மொழிதான் தெரியும்;புரியும் என...