உனக்கது பிடிக்குதா சொல்...?
என்று பிறப்பாய் என்றிருந்தேன் இன்று நீ பிறந்தாய்.. என்ன பெயர் அப்பா எனக்கு என்பதாய் வாய் திறந்தாய்... எந்தமிழ் எழுத்தெல்லாம் என்னில் தொடங்கு எனக் கேட்க பண்ணிருந்தும் பாட்டெழுதாப் பாவலன் நிலை எனக்கு... இனிய பெயர் தேடி இரவெல்லாம் தவித்தேன் நான் பகல் முழுதும் உனைப் பார்த்தே பார்வை தொலைத்ததனால்... விழியழகைச் சொல்லிவிட ஒருபெயரும் விரலழகைச் சொல்லிவிட ஒரு பெயரும் முக அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும்- உன் முழு அழகைச் சொல்லிவிட ஒரு பெயரும் உருமாறி ஒலிமாறி ஒன்றன்பின் ஒன்றாய் உனக்காகக் கால்வலித்துக் காத்திருக்க ஒற்றைப் பெயர் கண்டேனே கண்மணியே உனக்கது பிடிக்குதா சொல்...?