Aug 6, 2009

உறுத்தல் 2

தமிழ் பெயர்களும் ஆங்கில எழுத்துகளும்...

குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்டுவது இயல்பான நிகழ்ச்சியே. பிறப்புப் பத்திரம் எடுக்க அப்பெயரை ஆங்கில எழுத்தில் எழுதுவதும் வழக்கமானது கூட. இதில் எனக்குப் புரிபடாத செய்தி ஒன்று உள்ளது. அது, தமிழ்ப் பெயரை ஆங்கில எழுத்தில் எழுதும் போது அப்பெயரை ஆங்கில உச்சரிப்பில் படிப்பதா இல்லை மலாய் உச்சரிப்பில் படிப்பதா என்பதுதான். பெரும்பாலான பெயர்களை மருத்துவமனைகளில் உள்ள மலாய் தாதியர்கள் தவறாக அழைப்பதும்; அது விளங்காமல் நாம் தலை சொறிந்து நிற்பதும் கண்கூடு. இந்த சிக்கலின் பின்னணி என்ன?
50களில் பதிவகங்களில் நாம் நம் பெயரைச் சொல்ல, அதை அங்கிருக்கும் சீனரோ மலாய்க்காரரோதான் பதிவு செய்வர். அப்போது நிறைய பிழைகள் வந்தது இயல்பே. ஆனால் இப்போது? நம்மில் பெரும்பாலோருக்கு மலாய் எழுதப் படிக்கத் தெரியும். நம் அக்கம்பக்கத்து தமிழ்குடும்பங்களிலும் படித்தவர்கள் இருப்பார்கள். நாம் தான் நம் பெயர்ப்பாரங்களைப் பூர்த்தி செய்கிறோம் இருந்தும் அமுதன் என்ற பெயர் AMMUTTHAN என்று எழுதப்படுவது எதனால்? 2M 2T எதற்கு அப்பெயரில் ? அப்படி எழுதப்படும் பெயர்கள் மருத்துவமனையிலோ பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ "அம்முத்தன்" என்றுதானே அழைக்கப்படுகிறது? திவ்யா என்ற சிறுமியின் பெயர் THEIVVIYAH என்று எழுதுவது முறையா? தமிழர் அல்லாத ஒருவர் இந்தப் பெயரை சரியாக உச்சரிக்கவே முடியாது. நிச்சயம் "தேவையா" என்றே ஒலிக்கும். இது நமக்குத் தேவையா?
எனக்கு உறுத்துகிறது...!

5 comments:

சுப.நற்குணன் said...

நல்ல பதிவை எழுதியிருக்கிறீர்கள். இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என தோன்றுகிறது.

ஆனாலும், நீங்கள் வைத்திருக்கும் தலைப்பு 'உறுத்தல்'. அதற்கு ஏற்றதுபோல இந்தச் சின்ன துரும்பு செம்மையாகவே உறுத்துகிறது.

சோதிடம், எண்கணிதம் பண்ணுகிற குளறுபடிதான் இது என சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

நான் பார்த்த சில பெயர்கள் இதோ. இயல்பாக எழுத வேண்டியதை நம் மொழிமானங்கெட்டத் தமிழன் எப்படி எழுதியிருகிறான் பாருங்கள்...

1.முகிலன் - MUGGHILAN (முக்கிலன்)
2.கலாவதி - KALAAVATTHI (கலாவத்தி)
3.தேவன்ராஜ் - DEVAANRAAJ(டேவான்ராஜ்)
4.திவ்யா தேவி - TEVEI DEWI (தேவேய் டேவி)
5.தினேஷ் - DINNEESH (டின்னீஷ்)

தமிழன் தன் சொந்த மொழியில் - தமிழில் பெயர் வைக்காதது ஒரு மானக்கேடு! அப்படி வைக்கும் கண்டகண்ட பெயரையும் கொத்திக் குதறி வைப்பது அதைவிடப் பெருங்கேடு!!

இப்படியெல்லாம் பெயர் வைப்பதால் புள்ளைகள் வெளங்குதோ இல்லையோ... ஆனால் பெயர் குறித்துக் கொடுக்கும் 'குருக்கள்மார்கள்' காசை வாங்கி கல்லாவில் போட்டுக்கிட்டு கொண்டாட்டமா - கும்மாளமா இருக்காங்கயோவ்!!!

உங்கள் தமிழோடு எனக்கும் நேசம்தான். தொடரட்டும்.....

தமிழரண் said...

வணக்கம். தற்காலத்திற்கு ஏற்ற நல்ல பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள்.

எனக்கும் இந்த உறுத்தல் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது...

தமிழ்ப்பெயர்களுக்கு ஆங்கில எண் கணக்கு எப்படிதான் வேலை செய்கிறதோ போங்க.... தமிழ் தோன்றிய காலம் எங்கே? ஆங்கில எழுத்துக்கள் தோன்றிய காலம் எங்கே??? ஒரு "A" என்ற ஆங்கில எழுத்தைக் கூட்டுவதால் அல்லது குறைப்பதால் ஒருவன் தலைவிதியே மாறிவிடும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? தமிழரின் மெய்ப்பொருள் அறிவிற்கு இது முற்றிலும் முரணானது.

"மனதிட்பமே ஒருவனது வினைத்திட்பம்"

நன்றி.

ஒற்றன் said...

அன்பின் கி.விக்கினேசு,

குழந்தைகளுக்கு இன்று பெயர்கள் அவரவர் சார்ந்துள்ள சமயத்தை ஒட்டியே வைக்கப்படுகின்றன. இனத்தைச் சார்ந்த பெயர்கள் குன்றிவருகின்றன. அவ்வகையில் இந்துத் தமிழர்கள் சமசுகிருதத்திலும், கிறித்துவத் தமிழர்கள் லத்தின், ஆங்கிலேயே பெயர்களையும், முசுலீம் தமிழர்கள் அரேபிய, மலாய்ப் பெயர்களையும் வைக்கின்றனர்.

மொழிப் பற்று ஏற்பட்டால்தான் நல்ல தமிழில் பெயர் சூட்டுவதற்கு பெற்றோர்கள் யோசிப்பார்கள்.

மொழிப்பற்று அதிகரிக்க அனைத்து தமிழியக்கங்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

விக்கினேசு கிருட்டிணன் said...

சுப.நற்குணன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே!
இந்தக் கொடுமை தமிழனன்றி யார் செய்வார்?

"தமிழ் தோன்றிய காலம் எங்கே? ஆங்கில எழுத்துக்கள் தோன்றிய காலம் எங்கே??? ஒரு "A" என்ற ஆங்கில எழுத்தைக் கூட்டுவதால் அல்லது குறைப்பதால் ஒருவன் தலைவிதியே மாறிவிடும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? "
ஆம் தமிழரண், பகுத்து அறியும் அறிவுள்ளவருக்கு உரித்தானது உங்கள் சிந்தனை. வருகைக்கு நன்றி.

விக்கினேசு கிருட்டிணன் said...

அருமையாகச் சொன்னீர்கள் அன்பின் ஒற்றன்,
தமிழ்ப் பற்று என்பதில் மட்டும் பற்றற்று நிற்கும் நம்மவர்களுக்கு இது பொருந்தும்.
நின் கருத்து சிந்தனைக்குரியது,நன்றி, மீண்டும் வருக,